ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இரவல் கணவன்

என் மீதான உன் நேசம்
குறையக், குறைய
தினமும் உன் பொய்களையே
எனக்கு உண்ணத் தருகின்றாய்.
நடு இரவில் எழுப்பும்
தொலைபேசி அழைப்புகளை
அலுவலக அழைப்பு என
நாசுக்காய் நகர்ந்து பேசுகின்றாய்.
ஞாயிற்று கிழமைகளில்’ ‘அர்ஜண்ட் ஒர்க்’
என அவசரமாக கிளம்பி பின்னிரவு
வீடு திரும்புகின்றாய்.
நம் தனிமை இரவுப் பேச்சுக்கள்
முடியும் முன்பே
தூங்கிப்போகின்றாய்.
சிறு விஷயங்களுக்கும்
வார்த்தைகளால் வதம் செய்கிறாய்.
என் கண்ணீர் உனக்கு
எரிந்து விழும் எரிகல் ஆயிற்று.

என் கோவலனே எத்தனை மாதவிகளின்
பின் வேண்டுமானாலும் சுற்றிக்கொள்.
எந்த பாண்டிய மன்னனிடமும்
நான் நீதி கேட்க்கப்போவதில்லை.
உனக்காக நான் எந்த மதுரைகளையும்
எரிக்கப்போவதில்லை.
எந்த ஒரு மாணிக்க பரல்களும்
என்னிடத்தில் இல்லை.
ஆனாலும்முடிவெடுக்க ஒரு
நொடி போதும்தானே.
இருந்தபோதிலும்
உன்னுடைய இடத்தில்
வேறு ஒருவனைப் பற்றி இன்னும்
யோசிக்கவில்லை நான்.

கருத்துகள் இல்லை: