செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

காதல்


கடவுளாலும்
கட்டுப்படுத்த
முடியாதஉணர்ச்சி,
காதல்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இரவல் கணவன்

என் மீதான உன் நேசம்
குறையக், குறைய
தினமும் உன் பொய்களையே
எனக்கு உண்ணத் தருகின்றாய்.
நடு இரவில் எழுப்பும்
தொலைபேசி அழைப்புகளை
அலுவலக அழைப்பு என
நாசுக்காய் நகர்ந்து பேசுகின்றாய்.
ஞாயிற்று கிழமைகளில்’ ‘அர்ஜண்ட் ஒர்க்’
என அவசரமாக கிளம்பி பின்னிரவு
வீடு திரும்புகின்றாய்.
நம் தனிமை இரவுப் பேச்சுக்கள்
முடியும் முன்பே
தூங்கிப்போகின்றாய்.
சிறு விஷயங்களுக்கும்
வார்த்தைகளால் வதம் செய்கிறாய்.
என் கண்ணீர் உனக்கு
எரிந்து விழும் எரிகல் ஆயிற்று.

என் கோவலனே எத்தனை மாதவிகளின்
பின் வேண்டுமானாலும் சுற்றிக்கொள்.
எந்த பாண்டிய மன்னனிடமும்
நான் நீதி கேட்க்கப்போவதில்லை.
உனக்காக நான் எந்த மதுரைகளையும்
எரிக்கப்போவதில்லை.
எந்த ஒரு மாணிக்க பரல்களும்
என்னிடத்தில் இல்லை.
ஆனாலும்முடிவெடுக்க ஒரு
நொடி போதும்தானே.
இருந்தபோதிலும்
உன்னுடைய இடத்தில்
வேறு ஒருவனைப் பற்றி இன்னும்
யோசிக்கவில்லை நான்.

முதலில் நீங்கள் ...

சிவனுக்கு சூலாயிதம்
முருகனுக்கு வேலாயிதம்
கிருஷ்ணனுக்கு சக்ராயுதம்.
ராமனுக்கு வில்
அய்யனாரப்பனுக்கு அருவாள்….
தயவு செய்து
முதலில் யாராவது
கடவுள்களுக்கு
கற்றுத்தாருங்கள்
அகிம்சையை.

ஆறாவது உணர்ச்சி

குழந்தை அழுதால்
சனியனே என
எரிந்து விழுகிறாய்.
நான் ரசித்து போடும்
தேனீரை சலிப்புடன்
ருசிக்கிறாய்.
மழை பெய்கையில்
அலுத்துக் கொள்கிறாய்.
அதிகாலை
பனி, சூரியோதயம்
வளையும் வானவில்
சிலு,சிலுவென
வீசும் குளிர்க் காற்று,
பௌர்ணமி நிலவு
நேற்று மொட்டைமாடியில்
பூத்த ரோஜா மொட்டுக்கள்
இப்படி எதையுமே
உனக்கு ரசிக்க
தெரியவில்லை…
எப்படி சொல்வேன்
நீ என் கணவனென்று.

ஞாயிறு, 28 ஜூன், 2009

இடது புறத்தில் ஓர் குடும்பம் (சிறுகதை)

இடது புறத்தில் ஓர் குடும்பம்


சிக்னல்கள் ஒளியிழந்திருந்தன.. வாகன இயக்கங்கள் மெல்ல குறைந்து சாலைகள் தூக்கத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தன..பாலாஜி தியேட்டர் வாசலில் செகண்ட் ஷோ கூட்டம்….ஒரு அதிரடி கதாநாயகனின் திரை சாகசங்களில் மயங்கிய,டிக்கெட்டுக்காக அலைபாய்ந்து கொண்டிருந்த நம் வருங்கால தூண்களால் நிறைந்திருந்தது.

தியேட்டரிலிருந்து ஐம்பது அடி நகர்கையில் ’நீல நியான் பெயர் பலகையில் ‘வேலு மிலிட்டரி ஹோட்டல் [ஏ.சி.] யை பார்தவுடன்
பைக்கை மெதுவாக்கினேன்.மதியம் ஒரு மணிப்போல் இரண்டு சமோசா,டீ’யுடன் என் லன்ச்’சை முடித்திருந்தேன்…அதற்கு மேல் நேரமும் இல்லை.இந்த இரவு பத்து மணிவரைக்கும் ஒன்றும் சாப்பிடவில்லை.வயிற்றின் சகல பாகங்களும் என்னை சபித்து கொண்டிருந்தன.உடல் முழுமைக்கும் ஒருவித சோர்வு பரவியிருந்தது.உடனே ஏதாவது உணவுக் கலவையை வயிற்றுக்குள் அனுப்பியே தீரவேண்டும்.இதற்கு மேலும் நேரம் கடத்துவது துரோகம்.

வண்டியை பார்க் செய்து உள்ளே நுழைகையில்,அதிக கூட்டமில்லை.

நான் பெரும்பாலும் தனிமை விரும்பி,சாப்பிடும்போதும் கூட……

விருப்பமானவற்றை ஒரு வெட்டு வெட்டும்போது.எந்த மூஞ்சியாவது நம்மையே எச்சில் ஒழுக பார்த்துக்கொண்டிருந்தால் ரசனையோடு சாப்பிடமுடியுமா என்ன?

ரெஸ்டாரரெண்டின் ஆக கடைசியில் யாருமில்லாத ஒர் மூலையில் அமர்ந்தேன்.எனக்கு சற்று முன் தள்ளி இடது புறத்தில் ஒரு பெண்மணியும்,கணவரும் அவர்களின் ராட்ச்சஸ சைஸ் மகனும் ஆக்கிரமித்திருந்தனர்.ஏறக்குறைய அவர்களும் அந்த பையனின் சைஸிக்கு குறைவில்லை.
அவர்களை அடுத்து இளைஞர்கள் இருவர் ‘ரொமாலி ரொட்டி’சைஸில் [சப்பாத்தியாகவும் இருக்கலாம்] எதையோ பிய்த்துக் கொண்டிருந்தனர்.
என் வலது புறத்தில் நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு அழகு சுந்தரி…
அவ்வளவே அந்த இடத்தின் பசியாற்ற வந்த ஜீவன்கள்.

வழக்கமாய் எல்லா சினிமாக்களிலும்,கதைகளிலும் வரும் அழகான பெண் போலத்தான் அந்த பெண்ணும் இருந்தாள்.நான்கு இளைஞர்களும் அவளுடம் போட்டியிடக்கூடிய நிலையில் இல்லையென்றாலும் சுமாரகத்தான் இருந்தனர். அவள் பேசிய மொழி எனக்கு புரியவில்லை..அவள் குஜராத்தியாக இருக்க வேண்டும்.பாண்டிச்சேரியில் இப்போது குஜராத்திகளும்,வங்காளிகளும் நிறயவே பெருகிவிட்டார்கள்.ஆனால் விஷயம் இப்போது அதுவல்ல…இவர்களும் இந்த கதையின் பார்வையாளர்கள்,அவ்வளவே!

பேரர் வந்து ”சார் என்ன வேணும்?தோசை ,சப்பாத்தி..பரோட்டா….”

எனக்கு எரிச்சலாய் வந்தது..பெரும்பாலும் இந்த சர்வர்கள் ஏதோ கையேந்தி பவன் ரேஞ்சுக்கு ‘மெனு கார்டை கண்ணுக்கே காட்டாமல் என்ன வேணும்னுட்டு கையில நோட்புக்கோட வந்து நின்னு ஒரே மாதிரி ரைமிங்கா வழக்கமான அயிட்டத்தையே கேட்டா என்ன சொல்றது..எப்போதும் இட்லி, தோசையாவேவா சாப்பிட முடியும்.

“மெனு கார்டை கொண்டாப்பா”

வந்தது….!பார்த்தேன்.

டெலிபோன் டைரியைபோல் வரிசலாய்…இருநூறு அயிட்டமாவது இருக்கும்.இதில் முக்கால்வாசி அயிட்டம் எப்படியும் இல்லைனுதான் சொல்லப்போறான்…
என் அனுபவத்தில் சில அயிட்டங்கள் மெனுக்கார்டுகளில் மட்டுமே கிடைக்கும்..சிக்கலான ரெசிபிக்களையெல்லாம் செஃப்கள் மறந்து போயிருப்பார்களோ என்னவோ..கேட்டவுடன்
சர்வர் ’அது இல்லை சார்,இப்பதான் தீர்ந்தது’ என்பான்…

தேடி பிடித்து ஷங்காய் ப்ரான்’ என்றால் ‘ப்ரான்’ இல்ல சார்’,
சரி…ஒகே..ஒரு ஷெஸ்வான் நூடுல்ஸ்”
“சாரி சார் ஷெஸ்வான் சாஸ் தீர்ந்து போச்சு’ இப்படி கலர்,கலராய் ரெடிமேட் பதில் நிச்சயமாய் இருக்கும்..

அப்படியே அகஸ்மாத்தா ஷெஸ்வான் நூடுல்ஸ் வந்தாலும் அது ரெட் ஃபுட் கலர் புடவை சுத்தின ஒரு வெஜிடெபிள் நூடுல்ஸ் அவ்வளவே.

ஒருநாள் இல்ல ஒருநாள் இப்படிப்பட்ட அற்புதமான காரணங்கள் கூட நமக்கு கிடைக்கலாம்…“ தீப்பெட்டி இல்ல சார், கேஸ் தீந்துபோச்சு,செஃப்போட பாட்டி செத்து போய்ட்டாங்க அதனால் இந்த அயிட்டம் இல்ல” ன்னு சொன்னாலும்
”ரொம்ப சந்தோஷம்,ஐஸ்வாட்டராவது கொடுப்பானு கேட்டு, கொடுத்தா குடிச்சிட்டு சந்தோஷமா டிப்ஸ் வெச்சுட்டு வரவேண்டியதுதான்.....

நட்சத்திர ஒட்டல்களில் கேட்டது பெரும்பாலும் வந்துவிடும்..இதுமாதிரி ரெண்டுங் கெட்டான் ஓட்டல்கள் நசை.. செஃப்கள் அரை சோம்பேரிகள்..

ஆனாலும் நான் குழம்பிக்கொண்டிருந்தேன்..இந்த நீண்ட வரிசையில் எதை தேர்ந்தெடுப்பது…நான் கேட்டு சர்வர் இல்லை என சொல்லிவிட்டால்…
முக்கியமாக எனக்கு பிடித்த அயிட்டமாக இருக்க வேண்டும்.’பசி ,ருசி அறியாது ‘ பழமொழிக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன்.அகோரப்பசி என்றாலும் அற்புதமாக இருந்தால்தான் என் நாக்கு அனுமதிக்கும்.

சர்வர் என் பக்கதிலேயே நின்று கொண்டிருந்தான்.இதுவும் எனக்கு பிடிக்காத ஒன்றுதான்... என் கண்ணுல என்ன ஸ்கேனரா இருக்கு. நிமிடத்தில் இந்த நான்கு பக்க மெனுவையும் மூளைக்குள் செலுத்திக்கொள்ள ?நாம் நிதானமாக மெனுவில் மேய்வதற்க்குள் சர்வர் பெருமக்களுக்கு குளிர் ஜீரம் வந்துவிடும் போலும். ’நான் உன் பக்கத்திலேயே எவ்வளவு நேரம் நிக்கறது,சீக்கிரம் சொல்’ என்பது போன்ற கட்டளை பாவனை இது. கூப்பிடும் போது வந்தால் போதாதா?
இவர்களுக்கெல்லாம் பொறுமைக்கான மினி கோச்சிங் கிளாஸ் வைத்தால் ,இவர்களின் முதலாளிகளுக்கு நிச்சயம் சொர்கத்தில் இடமுண்டு.

நான் இன்னும் தீர்மானிக்கவில்லை..
அவன் பொறுமையிழந்து அந்த அழகு குஜராத் குதிரையின் மேஜைக்கு நகர்ந்தான்.என்னவோ அவளிடம் பேசிக்கொண்டே தப்புத் தப்பாய் பார்த்தான்.அடிக்கடி என்னையும் திரும்பி பார்த்துக்கொண்டான்.

சரி போனால் போகிறது…அவனுக்கு வரம் அளித்து விடலாம் என்ற பேராசையுடன் “இங்க வாப்பா” என்றேன். என் டெசிபலை குறைத்துக்கொண்டு,அதிராமல்தான் கூப்பிட்டேன்.ஆனாலும் அதை அவன் கண்டுகொண்டு,என்னை திரும்பிப்பார்த்து ஆச்சர்யப்படுத்தினான்.

”ரெண்டு பட்டர் நான்,ஒரு ப்ரான் மஞ்சுரியன் கிரேவி, ஒரு ……..”

“சாரி சார் ப்ரான் இல்லை” என் ஆசையில் முதல் கல்லெறிந்தான்.
நான் சிரித்தேன்.

”சரி…….கோங்கூரா சிக்கன்….”

அவன் உதடுகள் பிரியாமல் அழுத்தமாய் சிரித்தான்.”குளோசிங் டைம் சார்…இப்ப அதெல்லாம் கிடைக்காது”

“ஏம்பா, பதினோரு மணிக்குத்தானே குளோசிங்…இப்ப பத்துதானே ஆகுது”

“பத்து இருபது..”

“ ஸோ வாட்…பத்து இருபதுக்கு ஆர்டர் எடுக்க மாட்டிங்களா?”

“எப்படியும் ப்ரிப்பேர் பண்ண அரை மணி நேரம் ஆகும்…அதனால கடைசி நேரத்துல இந்த மாதிரி ஆர்டரெல்லாம் எடுக்கறது இல்ல…”

”எவ்வளவு நேரம் வேணாலும் நான் வெயிட் பண்ணரேன்..நீங்க கொண்டு வாங்க..”

அவன் அரை மனதுடன்தான் நகர்ந்தான்..அவனை மிரட்டி சாதித்ததாய் மகிழ்ந்த அரை நிமிடத்தில் திரும்பி வந்து “எஸ் கீயூஸ் மீ சார்…’கோங்கூரா’ சுத்தமா இல்லையாம்…’சிக்கன் பெப்பர்’ ஒகேவான்னு ’செஃப்’ கேட்க்கச் சொன்னார்” இரண்டாவது கல்.

”சரி எதையாவது கொண்டுவாப்பா..பசி கொல்லுது”என் ருசி அவஸ்தைகளை தளர்த்திக்கொண்டு,பசி அவஸ்த்தைக்கு பலிகடா ஆனேன்.

கை அலம்பிகொண்டு,மறுபடியும் வந்தமர்கையில், அந்த எக்ஸ்ரா லார்ஜ்’ குடும்பம்,பரோட்டாக்களை சால்னாவில் புரட்டி பந்தாடிக்கொண்டிருந்தது.
எனக்கு நாக்கில் ஜலம் ஊறியது.அந்த பையன் பிளேட் நிறைய சிக்கனோ.மட்டனோ வைத்துக்கொண்டு,நிதானமாக ஒவ்வொன்றாய் சாப்பிட்டு வெறுப்பேற்றினான்.அவன் அம்மா கேட்டபோது கூட கொடுக்காமல் சொத்தை பாதுகாப்பது போல் பாதுகாத்து,.தர மறுத்து விட்டான்.தும்பிக்கை மட்டும் இருந்திருந்தால் தைரியமாய் கோவில் எழுப்பலாம்.பிள்ளையார் வேஷத்துக்கு அப்படி பொருத்தமான கணபதி சாரீரம் அவனுக்கு.

அவர்களை அடுத்த அந்த இரு இளைஞர்களும் போஜனத்தை முடித்துவிட்டு பல் குத்திக்கொண்டிருந்தனர்.அவர்களுக்கான பில்லை மேனேஜர் தயார் செய்து கொண்டிருந்தான்.

என் எதிர் குஜராத்திகளின் கடலையோ இன்னும் தீர்ந்த பாடில்லை.அவள் சாதரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள்..ஆனால் அந்த நான்கு இளைஞர்களும் அவளை ஈர்க்கும் விதத்தில் பேசியது கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.அவளின் ’லோ கட்’ பிரதேசங்களை அடிக்கடி அந்த பக்கம் போகும் போதும்,வரும் போதும் சர்வரின் கள்ளக் கண்கள் திருடிகொண்டிருந்தன.

நான் அந்த சர்வரை “ தம்பி “ என மறுபடி அழைத்தேன்”கூல் ட்ரிங்ஸ்’ ஏதாவது இருக்கா”

”கூல் ட்ரிங்ஸ் இல்ல சார்..மினரல் வாட்டர்தான் இருக்கு…”

“நாசமா போச்சு போ….பேசாம இந்த ஹோட்டல நரகத்துக்கு ஷிஃப்ட் பண்ணிடுங்க நல்லா ஓடும்……”என்றபோது அது நடந்தது…

அந்த பையனின் அம்மா,அவன் கவனிக்கவில்லை என நினைது இரண்டு துண்டங்களை திருடி வாயில் போட்டுவிட ,பையன் பார்த்துவிட்டான்…அவ்வளவுதான் என்னவொ தேள் கொட்டினா மாதிரி அப்படி ஒரு அலறல்… ஓஓஓவென கத்தினான். எனக்கு திடுக்கென்றது.

.அப்பனுக்கு என்ன நடந்தத்தென்றே புரியவில்லை..அதிர்ச்சியில் பையனை பார்த்து என்ன என்று உளுக்கினார்.
தாய்க்கு தான் மாட்டிக்கொண்டதைவிட பையன் இப்படி கத்துவான் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டாள் போலும்.அவள் புருஷனை பயத்துடன்
பார்த்தாள்.

.”அம்மா என்னோட சிக்கனை எடுத்துகிட்டாங்க..”பையன் அழுதான்.
அப்பனுக்கு விஷயத்தின் வீரியம் உரைத்து மனைவியை முறைத்தார்.

எல்லோரின் பார்வையும் இப்போது அந்த மேஜையின் மீது இருந்தது.சர்வரும்,மேனேஜரும் ஏதோ தெருக்கூத்து பார்க்கும் தோரணையில் ரசித்துக்கொண்டிருந்தனர்.


”அம்மாதானேடா செல்லம் எடுத்தேன்..பாரு இவ்வளவையும் சாப்பிடாம நீ வீணாத்தான் ஆக்குவ..”அம்மா சமாதன முயற்சியில் இறங்கினாள்.
முயற்சி தோல்விதான்…பாவம் ஒரு சிக்கன் பீஸ்ஸுக்காக மகனிடம் அத்தனை மனிதர்கள் முன் அவமானபட நேரும் என எதிர்பார்த்திருக்க மாட்டாள்.குளவிக்கூட்டில் கை வெய்த்த பின் வருந்தி லாபமென்ன..
.
குளவி தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தது.“அதெல்லாம் வீணாக்க மாட்டேன்..என்னோடதை திருப்பி கொடு..”இன்னும் சத்தமாக கத்தினான்.அந்த ஏ.சி. ஹாலில் இன்னும் அதிகமாக எதிரொலித்தது.

குஜராத் குட்டிக்கு நடந்தது புரிந்திருக்க வேண்டும்..கைகளால் பொத்திக்கொண்டு நாசுக்காய் சிரித்தாள்.அந்த இளைஞர்கள் கூட அவளை ரசிப்பதை நிறுத்திவிட்டு ,சிறுவனின் பஞ்சாயத்துக்கு தாவினர்.

“தினேஷ்..முதல்ல இதையெல்லாம் சாப்பிட்டு முடி..அப்புறம் உனக்கு தேவைன்னா அப்பா வேற வாங்கித்தரேன் சரியா?அழகாக
அதிகம் ஒலி எழுப்பாமல், கௌரவமாக பிரச்சனையை தீர்க்கப்பார்த்தார்
அப்பா.

சரியான கொடாக்கண்டன்… முடியாது என்பது போல் பலமாய் நாலா பக்கமும் தலையாட்டினான்.அத்தனை மனிதர்களின் வினோத பார்வைகளையும் ஒரு சேர தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறினார் தந்தை.

”ஏண்டி அறிவிருக்கா? அவன் எப்படியாவது சாப்பிட்டுட்டு போறான்…வெளியில வந்தும் என் மானத்த வாங்கனுமா?மகனை பார்த்து
“சனியனே வீட்டுக்கு வா,கவனிச்சுக்கறேன்”. அக்கம் பக்கம் பார்த்தபடி
மிரட்டி பார்த்தார் …
அவன் கீறல் விழுந்த சி.டி. மாதிரி “என் சிக்கன் வேணும்”அதே ட்ராக்கிலேயே நின்றான்.

“நல்லா தவிட்டு மூட்டையாட்டம் இர்ந்துகிட்டு ரெண்டு பீஸ் சிக்கனுக்கு ஊரையே கூட்டுறான் பாருங்க சார்…” ‘பட்டர்நான்’.’சிக்கன் பெப்பரோடு’ வந்த சர்வர் என்னிடம் சந்தோஷப்பட்டான்.
நீ கூடத்தான் பேண்ட் போட்ட ‘அண்டங்காக்கா’ மாதிரி இருந்துகிட்டு எதிர்த்த டேபிள் பிகரை ஆறு தடவை கண்ணாலே கொத்திட்ட..’ என்று சொல்ல நினைத்தேன்.

சும்மா சொல்லக்கூடாது…மிளகில் புரட்டிய அந்த கோழிக்கு சிறிது நேரம் அடிமையானேன்.ஒரே வரியில் அருமை.ஒரிரு வரியில் அருமையோ அருமை..ஆனால் முழுவதுமாக அதில் மூழ்கவிடாமல் .ரசித்து உணவருந்தும் சூழலை அந்த இடம் இழந்து கொண்டிருந்தது.
அவன் மேலும் வெறி பிடித்தவன் போல் கத்தினானே தவிர கூச்சல் குறைவதாக தெரியவில்லை.
கெஞ்சினார்,மிரட்டிப்பார்த்தார்….இப்போது என்னவிலை கொடுத்தேனும் அவனை ஊமையாக்க தயாராயிருந்தார்.மேனேஜரை அழைத்து
“இன்னொரு ப்ளேட் சிக்கன் கொண்டுவாங்க”

மேனேஜர் தயங்கினான்,…ங்கியபடியே “சாரி சார்…சிக்கன் தீர்ந்து போச்சு..”மெதுவாக சொன்னான்..
நான் சிரித்துவிட்டேன்.

“வேற என்ன இருக்கு…?”

“மட்டன் ஐட்டம்ஸ் இருக்கு கொண்டுவரவா?..”

“எதோ ஒன்னு சீக்கிரம் கொண்டுவாங்க..இல்லனா இந்த பிசாசு என் தலய வாங்கிடும்…சீக்கிரம்ம்…”அழுத்தமாக அவசரமாக சொன்னார்.
மேனேஜரின் முகத்தில் வெளியே காட்டிக்கொள்ள முடியாத சிரிப்பின்
ரேகைகள்.அடக்கமாக குறிப்பெடுத்துக்கொண்டு நகர்ந்தார்.

ஆனாலும் அந்த பையன் பிளிறலை நிறுத்தவில்லை…என்ன கொஞ்சம் சப்தத்தை குறைத்திருந்தான்..அம்மாவின் முகத்தில் ஏதோ தேச துரோக குற்றம் புரிந்த உணர்வு..அடுத்து பையன் என்ன கேட்பானோ,எப்போது அழுகை ஒயுமோ என்ற தவிப்பு.. புருஷனை அடிக்கடி பயத்தில் பார்த்தபடி இருந்தாள்.
அவரோ திரும்பி நாலா பக்கமும் நோட்டமிட்டார்.அவரின் பார்வை பட்டதும், அனைவரும் தமது பிளேட்டுகளில் கவனமிருப்பதைப்போல் பாவனை செய்தனர். அந்த பிஃகர் கூட சூப்பராக நடித்தாள்.
என்னால் சட்டென்று அவர் மீதிருந்த பார்வையை விலக்க முடியாததால் அவர் பார்வையில் விழுந்து தொலைத்தேன்.

நம்மை சுற்றி எதோ ஒரு அசாதாரண சூழல் நிலவும்போது வேடிக்கை பார்ப்பது இயல்புதானே.?
என்னவோ அந்த கோழித்துண்டங்களை நானே பிடுங்கியதுபோல அப்படி ஒரு பார்வை பர்த்தார்….உக்கிரப்பார்வை.
ஆனால் எனக்கு அந்த முகத்தைப்பார்த்து, நம்புங்கள்… சிரிப்புத்தான் வந்தது.
என்னையும் மீறி சின்னதாய் சிரித்துவிட்டேன்.

என் அவசர சிரிப்பு அவரது கௌரவத்தை உசுப்பியிருக்க வேண்டும்..”அப்பா சிக்கன்…”என்றவனின் கன்னத்தில் விட்டார் ஒர் அறை…
அந்த சிக்கலான சூழ்நிலையில் நான் சிரித்திருக்க கூடாதுதான்.ஆனால் அது நடந்துவிட்டது.சில வேளைகளில் இப்படித்தான் எனை மீறி சிரித்து விடுவேன்.கட்டுப்படுத்த முடியாது.தொட்டில் பழக்கம்.இயல்பான சிரிப்பைக்கூட தடைசெய்ய வேண்டுமா என்ன?ஆனால் இது போன்ற இக்கட்டில் இடம்,பொருள் உணர்ந்திருக்க வேண்டும். என்ன செய்வது அசந்தர்பத்தில் உதிர்த்த முத்து ,பையனின் கன்னத்தில் தெரித்துவிட்டது.

அவ்வளவுதான்…எல்லாம் முடிந்து விட்டது….ஒரு மதங்கொண்ட யானையிடம் மாட்டிக்கொண்ட பாகனாகிவிட்டார் அந்த பரிதாப தந்தை. மிச்சமிருந்த சிக்கன் பிளேட் ப்ரம்மாஸ்திரம் போல் மேலே பறந்தது. சில்வர் தண்ணீர் ஜக்’ என் காலில் வந்து விழுந்து ‘அடப்பாவி’ என்றேன்..பரோட்டா சால்னாவுடன் பயணிக்கும் பறக்கும் தட்டுக்களை முதல் முறை நான் இங்குதான் பார்த்தேன் .கூரையை தொட்ட சிக்கன் பிரம்மாஸ்த்ரங்கள் அதற்குமேல் போக வழியில்லாமல் இலக்கின்றி சிதறி எல்லோருக்கும் இலவசமாய் ஸ்பீட் போஸ்டல் மாதிரி வந்து சேர்ந்தது.

அந்த பெண் ஆ..வென அவளை மீறி அலறிவிட்டாள்.சுற்றியுள்ளவர்கள் அனைவரும் இந்த முறை ஓரப்பார்வையை நிறுத்திவிட்டு பகிரங்கமாகவே
பார்த்தனர்..சாப்பிடுவதை விட இது சுவரஸ்யமாயிருந்தது!

…அவரின் கொஞ்ச,நஞ்ச மானமும் சிக்கன் தட்டுக்களோடு சிதறிப்போனது.”இதுக்குத்தான் உங்களையெல்லாம்
வெளில கூட்டிக்கிட்டு வர்ரது இல்லை.கண்டவன் முன்னால அசிங்கப்படுத்திறீங்களே”மனைவியை பார்த்தார் என்னையும் பார்த்தார்.

‘கண்டவன்” என விளித்தது சாட்சாத் என்னைப் பார்த்துத்தான்..
அவர் அப்படி ஒருமையில் திட்டியது பற்றி எனக்கு வருத்தமோ.கோபமோ ஏற்படவில்லை. இன்னும் அதிகமாக சிரிப்புதான் வந்தது.அவசர,அவசரமாக தண்ணீர் ஊற்றி வாயை அடைத்தேன்.

மனைவியால் எதிர்த்து எதுவும் பேசமுடியவில்லை.ஏதாவது வாய்திறந்தால் அவளுக்கும் ஒன்று விழுகிற அபாய வளையத்தில்தான் இருந்தாள். அதிகமாய் பயந்து வேறு போயிருந்தாள்.”அழாதடா கண்ணா..இங்க வா” சிறுவனை இழுத்து அணைத்துக்கொள்ள முற்பட்டாள்.

“ப்போ…”அவளை உதறித்தள்ளினான் பையன்.ஆனாலும் அவள் அவனை இழுத்து,சமாதனப்படுத்த முயற்சித்தாள்.

கீழே சிதறியவைகளை டேபிள் துடைக்கும் இளைஞன் சேகரித்துக் கொண்டிருந்தான்.என் காலடியில் இருந்த ஜக்கை சர்வர் எடுத்தபடி ”வேற எதாவது வேணுமா சார்” என்றான் சிரித்துக்கொண்டே…
எனக்கும் சிரிப்புத்தான்…வாயைத்திறந்தால் நிச்சயம் சிரித்துவிடுவேன்.
சைகையாலே ’பில்’கேட்டேன்.தலையாட்டிவிட்டு சென்றான்

அந்த தந்தை தண்ணீர் எடுத்து முழுவதுமாய் குடித்து டென்ஷனை விரட்டிக்கொண்டே என்னைப் பார்த்தார். நான் மறுபடியும் அவசரமாய் தண்ணீர் குடித்தேன்.

பையன் அழுகொண்டிருந்தான்.ஆர்டர் செய்திருந்த மட்டன் சமாச்சாரங்களை சுடச்,சுட மேனேஜர் பவ்யமாக கொண்டு வந்து வைத்தார்.அவன் தொடவில்லை.தலை குனிந்து அழுதுகொண்டே இருந்தான்.தந்தை என்னைப்பார்த்தார்.நான் பில்’லுக்காக சர்வரை கை காட்டினேன்.

”தினேஷ் ,அழுதது போதும்…இந்தா..கண்ணை தொடச்சுகிட்டு சாப்பிடு..”குரலில் கண்டிப்பு இருந்தது…ஆனாலும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

எனக்கு பில் வந்தது..என்னை அவர் பார்த்துக்கொண்டே “ம்ம்..”சாப்பிடு”
என முன்பை விட வேகமாக அதட்டினார்.

நான் ஒரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன்.அவன் மசிவதாக தெரியவில்லை..
சற்று இறங்கி வந்தார்.. “சாப்பிடுப்பா”குரலில் குழைந்தபடி நெருங்கி அவன் தலையை வருடினார்.அவர் கையை வேகமாக தள்ளிவிட்டவன்.
“”போடா…”என்றபடி சப்பென்று அவர் கன்னத்தில் அறைந்தான்.

பின் குறிப்பு: பையன் அடித்த அடியில் அந்த இடமே மறுபடியும் களோபரமாகிவிட,அந்த கலவரத்தில் நான் ’பில்’லுக்கு பணம் கொடுக்காமல் நழுவியிருந்தேன்.

வன் புணர்ச்சி

நனைதலை தவிர்க்க
ஓரமாய்
ஒதுங்கிச்செல்கின்றன
பாதங்கள்..
வலுக்கட்டாயமாய்
ஈரப்படுத்துகின்றன அலைகள்
உன் பிரதியாய்.

சந்தேகம்

ஆதாரமற்ற உன்
கேள்விகளின் அணிவகுப்பு
அசைத்து செல்கிறது
உன் மீதான
என் நம்பிக்கையை